விருதுநகர்: ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகள்; தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழிற்சாலைகள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவின் கீழ் 400 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1080 பட்டாசு ஆலை இயங்கி வருகின்றன.
இந்தப் பட்டாசு ஆலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தப் பட்டாசு ஆலைகளில் மனிதத் தவறுகள் மற்றும் இயற்கை காரணமாக அடிக்கடி வெடிவிபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் 2023-ல் விருதுநகர் கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தது தொடர்பாகத் தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் வழக்கை விசாரித்தது வருகிறது.
பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை தலைமையில் 10 குழுக்களை அமைத்து விரைந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வு செய்ய அதிகாரிகள் செல்லும்போது பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை எனவும், உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் ஆலைகளை மூடி விட்டுச் சென்று விடுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், அதிகாரிகளின் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் பட்டாசு ஆலை உரிமையாளர் சங்கத்தையும் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலரையும் சேர்க்க உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளில் தொழிலாளர்கள் பலியாவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.