வங்கதேச விமான விபத்து: `தீயில் எரிந்து கொண்டிருந்தனர்; கல்லாக...'- நேரில் பார்த்த ஆசிரியர் வேதனை!
நேற்று (ஜூலை 21) பிற்பகல் 1 முதல் 2 மணி அளவில் நடந்த வங்கதேச ராணுவ விமான விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் - 7 பிஜிஐ என்ற போர் பயிற்சி விமானம் ஒன்று அங்கிருந்த மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நொறுங்கி விழுந்து விபத்து ஏற்பட்டதில் நேற்றுவரை 19 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்தன.

இன்று இவ்விபத்தின் பலி எண்ணிக்கை 27-ஆக உயிரிழந்திருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் 170-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கதேச வரலாற்றிலேயே இதுதான் மிகக் கோர விபத்தாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில் வங்கதேச விமானப் படையின் பழைமையான விமானங்களில் ஒன்று இந்த எஃப்-7 பிஜிஐ விமானம் என்றும், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும் கூடுதல் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இந்த விபத்தை அருகில் இருந்து நேரில் கண்ட பூர்ணிமா தாஸ் என்ற விபத்திற்குள்ளான பள்ளி மற்றும் கல்லூரியின் ஆசிரியர், "திடீரென காதைக் கிழிக்கும் சத்தம் இடியாக வந்து விழுந்தது. கொஞ்சம் நேரம் நிதானித்து என் அறையை விட்டு வெளியே பார்த்தால் எனக்கு 2 அடிக்கு அருகில் இருந்த மொத்தக் கட்டடமும் தீயில் எரிந்து கொண்டிருந்தது. தீயில் சிக்கி பலர் எரிந்து கொண்டிருந்தனர். ஏதும் செய்ய முடியாமல் கல்மாதிரி நின்று கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பாதிப்பில் சிக்காத மாணவர்களையெல்லாம் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பும் வேலையை அதித்தீவிரமாகச் செய்து கொண்டிருந்தோம். சுமார் 80% மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவிட்டோம்." என்று வேதனையுடன் பேசியிருக்கிறார்.
மஹரின் (Maharin) என்ற ஆசிரியை விபத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டிருந்தபோதும் அங்கிருந்த சில குழந்தைகளை காப்பாற்றி மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு, சில மணிநேரத்திற்குப் பிறகு அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த மாணவர்களும் மீட்புக் குழுவுடன் சேர்ந்து சக மாணவர்கள், நண்பர்களின் உடலை மீட்டு வரும் காட்சிகள் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs