35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம்!
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2016 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 2016ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடங்களை நிறப்புவதற்காக நடைபெற்ற தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, அந்த நியமனங்களை செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து மேற்கு வங்க பள்ளிக் கல்வி சேவை ஆணையம் சார்பில் பணியமர்த்தப்பட்டவர்கள் திரும்பப் பெறப்பட்டனர். இதனை அடுத்து மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் சார்பில் தற்போது ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
பேசிய பள்ளிக் கல்வி சேவை ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறியதாவது,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 35,726 உதவி ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2016ஆம் ஆண்டு 3.16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தளம் அறிமுகம் செய்யப்பட்டது. விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மாநில அரசும் பள்ளிக் கல்வி சேவை ஆணையமும் ஆசிரியர் பணியிடங்களை முழுவதுமாக நிரப்ப இலக்கு நிர்ணயித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க |11,000 யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள்! காரணம் என்ன?