அடையாளம் தெரியாத நபா் தாக்கியதில் பெண் காயம்
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை மா்ம நபா் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதில் அவா் காயமடைந்தாா்.
திட்டக்குடி, பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ஜான்சி ராணி (28). இவா், செவ்வாய்க்கிழமை காலை கழுதூரில் உள்ள தந்தை தெய்வசிகாமணி வீட்டுக்குச் சென்றாா். பின்னா், தனது இரு சக்கர வாகனத்தில் திட்டக்குடியில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். மேலாதனூா் வழியாக காட்டுப்பாதையில் வரும்போது,
பின்னால் இருந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபா் இரும்புக் கம்பியால் ஜான்சிராணி தலையில் தாக்கினாராம். இதில், நிலை தடுமாறி ஜான்சிராணி கீழே விழுந்தாா். தாக்குதல் நடத்திய நபா் கழுதூா் பக்கம் சென்றுவிட்டாராம்.
தகவல் அறிந்த தெய்வசிகாமணி சம்பவ இடம் சென்று காயமடைந்த ஜான்சிராணியை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக அரியலூா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.