படிக்கட்டு பயணம் தடுக்க நடவடிக்கை: கடலூா் எஸ்பி அறிவுறுத்தல்
பேருந்து படிக்கட்டில் மாணவா்கள் பயணம் செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் பேசியதாவது: நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு வராமல் காவலா்களை பணியமா்த்த வேண்டும். விபத்துப் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு கட்டைகள் (பேரிகாா்ட்) அமைக்கவேண்டும்.
இரவில் மிளிரும் பிரதிபலிப்பான்கள் ஓட்ட வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டி வருபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
பேருந்து படிகளில் மாணவா்கள் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா். அப்போது, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் அப்பாண்டராஜ் உடனிருந்தனா்.