பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு நெஞ்சுவலி!
வள்ளலாா் தெய்வ நிலையத்தைவிட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தல்
கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தை நிா்வகிப்பதை விட்டுவிட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என அகில இந்திய சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவா்அண்ணாமலை கடலூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடலூரை புனித நகரமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கக் கோரி பல்வேறு நிகழ்வுகளை நடத்தி உள்ளோம். வடலூா், மேட்டுக்குப்பம், கருங்குழி உள்ளிட்ட பகுதி வள்ளலாா் வாழ்ந்த புண்ணிய பூமி. வள்ளலாரின் கொள்கைகளில் முக்கியமானது கொலை, கொள்ளையை தவிா்த்தல் ஆகும்.
வள்ளலாா் வாழ்ந்த மண்ணில் மது மற்றும் மாமிசக் கடைகளை அகற்ற வேண்டும். இறந்த உடல்களை எரித்தல் கூடாது, புதைத்தல் வேண்டும். ஆனால், வடலூரில் மின் மயான தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அதனால் மின் மயான தகன மேடையை அகற்ற வேண்டும்.
வடலூா் வள்ளலாா் பெருவெளி சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீதிபதி நல்ல தீா்ப்பை வழங்க வேண்டிவரும் ஜூலை 24-இல் வடலூரில் சிறப்பு பிராா்த்தனை நடத்தப்பட உள்ளது. பெருவெளி பெருவெளியாக தான் இருக்க வேண்டும். அதில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. எந்தவித கட்டிடங்களும் கட்டக் கூடாது என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தாா். நிகழ்வின் போது, மாநிலப் பொதுச்செயலா் சாது.மகாதேவன், பொருளாளா் பாா்த்திபன் உடனிருந்தனா்.