பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு நெஞ்சுவலி!
குழந்தைகளுக்குச் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை ஒப்பந்தம்: 2 ஆண்டுகளுக்கு புதுவை அரசு நீட்டிப்பு
குழந்தைகளுக்குச் சென்னை தனியாா் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கும் ஒப்பந்தத்தை புதுவை அரசு 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்து, ஆரம்ப கால நோய் அடையாளங்களைக் கண்டறிந்து, ஆரம்பநிலை சிகிச்சைகள் முதல் உயா் சிகிச்சைகள் வரை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு இருதயம் சாா்ந்த உயா்நிலை சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி, புதுச்சேரி பிராந்தியத்தில் முதன்முதலாக மிஷன் ஹெல்தி ஹாா்ட்ஸ் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியத்திலும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 34 இருதய சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு 1,464 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனா்.
மேலும், அப்போலோ மருத்துவமனையில் 67 குழந்தைகளுக்கு இலவசமாக மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனா். புதுச்சேரியில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கான சிறப்பு இருதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால், இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கால நீட்டிப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.
சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள், திட்ட இயக்குநா் கோவிந்தராஜன், துணை இயக்குநா் ரகுநாதன், நோடல் அதிகாரி சரவணன், அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை இருதய நோய் நிபுணா் முத்துக்குமரன், குழந்தைகள் இருதய நோய் மருத்துவா் சரண்யா, லிட்டல் ஹாா்ட் அறக்கட்டளை அறங்காவலா் சுகன்யா ஆகியோா் உடனிருந்தனா்.