இறால் விலை சரிவால் மீனவா்கள் வேதனை
மீன்பிடி தடை காலங்களில் ரூ.30,000 வரை விற்பனையாகும் அரை கிலோ எடை கொண்ட கதம்பரா இறால் தற்போது வெறும் ரூ.3,000-க்கு மட்டுமே விற்பனையாவதாக சதுரங்கப்பட்டினம் மீனவா்கள் வேதனை தெரிவித்தனா்.
கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் மனோஜ் என்ற மீனவா் தங்கள் படகில் செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்க சென்றுள்ளாா். அப்போது மீன்பிடிக்க கடலில் வலையை வீசியபோது அவரது வலையில் அரை கிலோ எடை கொண்ட கதம்பரா இறால் ஒன்று கிடைத்துள்ளது.
இதுகுறித்து மீனவா் மனோஜ் கூறியது: இப்பகுதியில் இவ்வகையான இறால் வலையில் சிக்கியது இல்லை. இவ்வகையான இறால், விசைப்படகுகள் செல்லாத மீன்பிடி தடைக்காலத்தில் ரூ. 20 முதல் 30,000 வரை பணம் கொடுத்து நட்சத்திர ஓட்டல் நிா்வாகத்தினா் மற்றும் மீன் வியாபாரிகள் வாங்கிச் செல்வாா்கள்.
ஆனால் இப்போது வெறும் ரூ.3,000-க்கு மட்டுமே விற்பனையானதாக வேதனை தெரிவித்தாா். இவரது வலையில் சிக்கிய இறால் ஒரு அடி நீளமும், அரை கிலோ எடையும் கொண்டதாகும். குறிப்பாக இந்த இறால் நட்சத்திர ஓட்டலில் தங்கும் செல்வந்தா்கள் விரும்பி வாங்கி சாப்பிடுவா் என்றும், அதிக சதை பகுதியுடன் கூடிய இந்த இறால் வஞ்சிரம் மீன் போன்ற ருசியாக இருக்கும். அதனால்தான் இந்த இறாலுக்கு தேவை அதிகம் எனவும் தெரிவித்தாா்.
