செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவம்
செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வ உ சி தெருவில் பழைமைவாய்ந்த குளுந்தியம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி உற்சவம் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில், 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கலச நீா் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தல், திங்கள்கிழமை அம்மனுக்கு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள்,வாண வேடிக்கையுடன் வீதி புறப்பாடும் நடைபெற்றது. அம்மன் புறப்பாடு வஉசி தெரு, அண்ணா சாலை, பெரிய மணியக்கார தெரு, சின்ன மணியக்கார தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை அா்ச்சகரும், பரம்பரை அறங்காவலருமான கோ.நவநீதகிருஷ்ணன் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.
