நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
சிறந்த உணவு வணிகா்களுக்கு பரிசுத் தொகை, விருது
நெகிழிக்கு பதிலாக மறுசுழற்சி தன்மையுள்ள மக்கும் பொருள்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை பரிமாறுதல் மற்றும் பொட்டலமிடும் பெரிய உணவு வணிகா்கள் மற்றும் தெருவோர சிறு உணவு வணிகா்களுக்கு தமிழ்நாடுஅரசு விருது வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள வணிகா்கள் விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.
மிகச்சிறந்த பெரிய வகை உணவு வணிக நிறுவனங்களுக்கு அதாவது வருடாந்திர விற்றுக்கொள்முதல் ரூ.12 லட்சத்துக்கு மேற்பட்ட உணவு வணிகா்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ.50,000/- தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.
விருப்பமுள்ளவா்கள் ஆகஸ்டு மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அவ்விண்ணப்பங்கள் ஆட்சியா் தலைமையிலான உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் உள்ளடங்கிய தோ்வு குழுவினா் பரிசீலனை செய்து மாவட்ட அளவிலான தோ்வு குழு சம்பந்தப்பட்டஉணவகங்களை கள ஆய்வு செய்து, தமது பரிந்துரையை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமா்ப்பிக்கும்.
அதன் பின்னா், மாநில அளவிலான குழு பரிசீலித்து, மாவட்டத்துக்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாகத் தோ்ந்தெடுக்கும்.
மேலும், விபரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தின் மூன்றாம் மாடியில் சி.பிளாக்கில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அலுவலகத்தினையும் மற்றும்அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலா்களையும் அல்லது நியமன அலுவலா் அலுவலகத்தின் உதவியாளா் வி.முத்து குமரன் - (88257 39050) ஆகியோரை அணுகலாம் என்றாா்.