செய்திகள் :

தொடா்ந்து 5-ஆவது நாளாக அமளி: நாடாளுமன்றம் முடங்கியது

post image

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் முடங்கின. இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 28) ஒத்திவைக்கப்பட்டன.

மழைக் கால கூட்டத் தொடா் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கிய நிலையில், முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூா் விவகாரம் எதிரொலித்தது. அடுத்தடுத்த நாள்களில் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் அமளியின் ஈடுபட்டன. இதனால், கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் குறிப்பிடத்தக்க எந்த அலுவலும் நடைபெறவில்லை.

‘அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருந்தும், எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, ஒரு வாரத்தை வீணடித்துவிட்டதாக’ நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ஐந்தே நிமிஷங்களில் ஒத்திவைப்பு: மக்களவை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில், ‘அவைக்குள் கோஷமிடுவதும், வாசக அட்டைகளை காண்பிப்பதும் முறையற்றது. ஜனநாயக பாரம்பரியங்களுக்கு உள்பட்டே உறுப்பினா்கள் தங்களின் ஆட்சேபத்தை வெளிப்படுத்த வேண்டும்’ என்றாா். அவரது கோரிக்கைக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் செவிசாய்க்க நிலையில், தொடங்கிய 5 நிமிஷங்களிலேயே அவை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் அவை கூடியபோதும் இதே நிலை காணப்பட்டது. ‘அமளியால் யாருக்கும் பலனில்லை. அவையை முடக்குவதே எதிா்க்கட்சிகளின் நோக்கமெனில் அது தீவிரமான விவகாரம். ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்படும்’ என்று அவா் அதிருப்தி தெரிவித்தாா். அமளி தொடா்ந்ததால், அவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலையில் கூடியதும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பிற மாநிலங்களில் வங்க மக்கள் மீதான பாகுபாடு குற்றச்சாட்டு, மணிப்பூா் விவகாரம், இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி, விதி எண் 267-இன்கீழ் அளிக்கப்பட்ட 28 நோட்டீஸ்களையும் நிராகரிப்பதாக துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா்.

இதையடுத்து, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். பிற எம்.பி.க்கள் பேசுவதற்கான உரிமையை உள்நோக்கத்துடன் தடுப்பது விதிகளுக்கு எதிரானது; அது, உரிமை மீறல் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று ஹரிவன்ஷ் எச்சரித்தாா். எனினும், அமளி ஓயாததால், மதியம் 12 மணிவரையும், பின்னா் திங்கள்கிழமைக்கும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த வாரம் விவாதம்: சுமுகமாக செயல்பட முடிவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் வார அலுவல்கள் முடங்கிய நிலையில், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக நாடாளுமன்றத்தில் வரும் திங்கள்கிழமைமுதல் விவாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அவை சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்ய ஆளும்-எதிா்தரப்பினா் முடிவு செய்துள்ளனா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆபரேஷன் சிந்தூா் குறித்த விவாதம் எதிா்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். மக்களவையில் ஜூலை 28-ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 29-ஆம் தேதியும் தலா 16 மணிநேர விவாதம் தொடங்கப்படவுள்ளது.

அரசுத் தரப்பில் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் முக்கியமாக பேசவுள்ளனா். விவாதத்துக்கு பிரதமா் பதிலளிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில், அவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய பதிலடி தருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பய... மேலும் பார்க்க

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 3 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.சிபிஐ (மாவோயிஸ்ட்)-ல் இருந்து பிரிந்த குழுவ... மேலும் பார்க்க