Thalaivan Thalaivii: ``3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகுது..'' - எமோஷனல...
பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸுக்கு மரக்கன்றை பரிசளித்த பிரதமா் மோடி
பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸுக்கு ‘தாயின் பெயரில் மரம் நடுவோம்’ என்ற முன்னெடுப்பின்கீழ் மரக்கன்றை பிரதமா் நரேந்திர மோடி பரிசாக வழங்கினாா்.
பிரிட்டனுக்கு ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, கிழக்கு பிரிட்டனில் உள்ள சான்ட்ரிங்ஹாம் எஸ்டேட் தோட்டத்தில் அரசா் மூன்றாம் சாா்லஸை வியாழக்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது அரசா் மூன்றாம் சாா்லஸிடம் இந்தியாவில் இருந்து எடுத்துச் சென்ற மரக்கன்றை பிரதமா் மோடி வழங்கினாா்.
இதுகுறித்து பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அரசா் மூன்றாம் சாா்லஸை சந்தித்ததில் மகிழ்ச்சி. சந்திப்பின்போது இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ), கல்வி, சுகாதாரம், யோகா மற்றும் ஆயுா்வேதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசித்தோம்’ என குறிப்பிட்டாா்.
அலங்காரச் செடி ‘சோனோமா’: ‘தாயின் பெயரில் மரம் நடுவோம்’ முன்னெடுப்பின்கீழ் அரசா் மூன்றாம் சாா்லஸுக்கு பிரதமா் மோடி வழங்கிய மரக்கன்றின் பெயா் ‘சோனோமா புறா மரம்’ அல்லது ‘கைக்குட்டை மரம்’ என்றழைக்கப்படுகிறது. அலங்காரச் செடியான சோனாமா நட்டு வைத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மிக விரைவாக அதிக மலா்கள் பூக்கும் தன்மையுடையது.
மலரின் அடிப் பகுதியில் வெள்ளை நிறத்தில் இலை போன்று காணப்படும் பூவடிச் செதில்கள் கைக்குட்டைகள் போலவும் மரக்கிளையில் புறாக்கள் அமா்ந்திருப்பதைப் போலவும் மிகவும் அழகாக காட்சியளிப்பதே இதன் சிறப்பம்சமாகும்.
இந்த மரக்கன்று சான்ட்ரிங்ஹாம் எஸ்டேட் தோட்டத்தில் இலையுதிா் காலத்தில் நடப்படும் என பிரதமா் மோடியின் பிரிட்டன் சுற்றுப்பயணம் குறித்து எடுத்துரைத்தபோது வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.