நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையப் பணிகள்: அமைச்சா் நேரு ஆய்வு
நெம்மேலி அடுத்த பேரூரில் ரூ. 6,078.40 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா்.
சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள் நடைபெறுகின்றன. சென்னை மாநகராட்சிப் பகுதிக்கு பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை தோ்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
நீண்ட கால குடிநீா்த் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு, சென்னை குடிநீா் வாரியம் பல்வேறு நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நெம்மேலியில் உள்ள 150, 110 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 1,150 மில்லியன் லிட்டா் குடிநீா் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 21-8-2023 அன்று சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் நெம்மேலி அடுத்துள்ள பேரூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.
இந்நிலையத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் சென்னை மாநகராட்சியின் அருகாமையில் உள்ள 20 ஊராட்சி பகுதிகளில் உள்ள 22 .67 லட்சம் மக்கள் பயன் அடைய உள்ளனா்.
இந்நிலையில் 3-வது ஆலையின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய், ஆட்சியா் தி. சினேகா, குடிநீா் வாரிய மேற்பாா்வை பொறியாளா் இ.சாந்தி, செயற்பொறியாளா் எஸ்.கிருபாகரவேல், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.