தொடங்கியது விகடன் மாணவப் பத்திரிகையாளர் கூட்டுப் பயிற்சி முகாம்!
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.362 கோடி: மத்திய அரசு தகவல்
புதுதில்லி: கடந்த 2021 இல் இருந்து 2024 வரை பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்களுக்காக ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓபிரையன் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வெளியுறவு அமைச்சகம் செலவின தரவு விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி 2021 முதல் ஜூலை 2025 வரை மேற்கொண்ட அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்களாக 20 நாடுகளுக்கு சென்றுள்ளார். இதற்கான செலவு ரூ.295 கோடியும், 2025 பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அமெரிக்கா, பிரான்ஸ், மொரிஷியஸ், தாய்லாந்து, இலங்கை மற்றும் சவுதி அரேபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களுக்காக ரூ.67 கோடி என மொத்தம் ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 10 முதல் 13 வரை மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். பிரான்ஸ் பயணங்களுக்காக ரூ.25 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்கா பயணங்களுக்காக ரூ.16 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3 முதல் 6 வரை தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு மேற்கொண்ட பயணங்களுக்காக ரூ.9 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. (தாய்லாந்து ரூ.4,92 கோடி மற்றும் இலங்கை ரூ.4,46 கோடி). ஏப்ரல் 22 முதல் 23 வரையிலான சவுதி அரேபியா பயணத்திற்காக ரூ.15,54 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மொரிஷியஸ் (மார்ச் 11-12), சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா (ஜூலை 15-19) மற்றும் கானா, டிரினிடாட் - டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா (ஜூலை 2-9) ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயண செலவு தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 பிப்ரவரி 13 முதல் 15 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தாருக்கு மேற்கொண்ட பயணங்களுக்காக ரூ.3.14 கோடி செலவிட்டுள்ளது. அதே நேரத்தில் மார்ச் 22 முதல் 23 வரை பூட்டான் பயணத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.4.50 கோடி. ஜூன் 13 முதல் 14 வரை இத்தாலி பயணத்திற்காக ரூ.14.36 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜூலை 8 முதல் 10 வரை ஆஸ்திரியா மற்றும் ரஷியா பயணங்களுக்காக முறையே ரூ.4.35 கோடி மற்றும் ரூ.5,34 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் 21 மற்றும் 23-க்கு இடையில் மேற்கொண்ட இரண்டு வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களையும் வெளியுறவு அமைச்சகம் பகிர்ந்துள்ளது. அதில், போலந்து பயணத்திற்காக ரூ.10.10 கோடி மற்றும் உக்ரைன் பயணத்திற்காக ரூ.2.52 கோடியும், செப்டம்பர் 3 முதல் 5 வரை புருனே பயணத்திற்காக ரூ.5,02 கோடி மற்றும் சிங்கப்பூர் பயணத்திற்காக ரூ.7.75 கோடி செலவிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21 முதல் 23 வரையிலான அமெரிக்க பயணத்திற்காக ரூ.15.34 செலவிட்டுள்ளது, அக்டோபர் 10 முதல் 11 வரையிலான லாவோ டிபிஆர் பயணத்திற்காக ரூ.3 கோடியே 73 ஆயிரம் செலவிட்டுள்ளது, அக்டோபர் 22 முதல் 23 வரையிலான ரஷியா பயணத்திற்காக ரூ.10.75 செலவிடப்பட்டுள்ளது.
2024 நவம்பர் 16-21 வரை நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளின் பயணங்களுக்காக நைஜீரியா ரூ.4.46 கோடி, பிரேசில் ரூ.5.51 கோடி மற்றும் கயானா ரூ.5.46 கோடி செலவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 22 முதல் 22 வரையிலான குவைத் பயணத்திற்காக ரூ.2,54 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2023 மே 19 முதல் டிசம்பர் 1 வரை 11 நாடுகளுக்கு ஆறு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக ஜப்பான் (ரூ.17.19 கோடி), ஆஸ்திரேலியா (ரூ.6.06 கோடி), அமெரிக்கா (ரூ.22.89 கோடி), பிரான்ஸ் (ரூ.13.74 கோடி), தென்னாப்பிரிக்கா (ரூ.6.11 கோடி) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணங்களுக்காக ரூ.4.28 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் 2023 ஆம் ஆண்டு எகிப்து பயணத்திற்காக விளம்பரம் மற்றும் ஒளிபரப்புக்கான செலவு மட்டும் ரூ.11.90 லட்சம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.