கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அரசு
புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ரூ. 44,323 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலதித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21 தொடங்கியுள்ள நிலையில், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சௌகான் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று(ஜூலை 22) அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பொருத்தவரையில், 2024-25 நிதியாண்டில் ரூ. 86,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இவ்வளவு அதிக நிதி இதுவரை ஒதுக்கப்பட்டதில்லை. அடுத்த நிதியாண்டிலும் ஊரக வேலைவாய்ப்புகளை ஊக்கப்படுத்த இத்திட்டத்துக்கு ரூ. 86,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கென மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் பாதிக்கும்மேல் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.