செய்திகள் :

திருப்பத்தூர்: `கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிச்சா, அதிகாரிகளே மிரட்டுறாங்க.!'- கொதிக்கும் மக்கள்

post image

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கள்ளியூர் கிராமத்தில் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முன்னரும், ஒரு சில மாதங்களுக்கு முன்பு, அப்பகுதி மக்கள் கல்குவாரி அமைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்குப் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். கள்ளியூர் பகுதியில் மீண்டும் கல்குவாரி அமைக்கப் பணிகள் நடைபெற்றதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென பச்சூர் வழியாகக் குப்பம் செல்லும் சாலையில், சென்றாய் சுவாமி கோயில் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகச் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாகப் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் மட்டுமே காட்டி வருவதாகக் குற்றம்சாட்டி, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ``2022 ஆம் ஆண்டிலிருந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கவில்லை. கள்ளியூர் பகுதியில் கல்குவாரியின் பணிகள் தொடங்கினால், வெடி வைக்கும்போது நிலத்தடி நீர் பாதிக்கப்படும். மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு நோய்த் தொற்று ஏற்படுவதோடு, நாங்கள் புதிதாகக் கட்டி வந்த வீடுகளில் விரிசல் ஏற்படும். அரசு உத்தரவுப்படி, கல்குவாரி அமைய உள்ள இடத்தில் 500 மீட்டர் தொலைவிற்கு வீடுகள் இருக்கக் கூடாது. ஆனால் தற்போது குவாரி உள்ள இடம் 160 மீட்டரில் தொலைவில் எங்கள் வீடுகள் உள்ளது. நாங்களே வீடு கட்டுவதற்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து எங்கள் வீட்டைக் கட்டியுள்ளோம். மேலும், கல்குவாரியில் வைக்கும் வெடிச் சத்தத்துக்குப் பயந்து காட்டில் உள்ள சிறுத்தை, கரடி, மான், மயில், குரங்குகள் அடிக்கடி ஊருக்குள் வந்துவிடுகின்றன. குவாரி அமைப்பதால் எங்கள் விவசாய நிலங்கள் பெரிதாகப் பாதிக்கப்படுகிறது.

காடுகள் இருந்தால்தான் எங்களுடைய வாழ்வாதாரமான ஆடு, மாடுகள் மேய்க்க முடியும். இந்தக் கல்குவாரி அமைந்தால் ஆடுகள், மாடுகள் உணவுக்காக அல்லாடும். பின்பு அதே போல் குடிப்பதற்குக் குடி தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுவோம். இந்தக் கல்குவாரி வீடுகளுக்கு அருகாமையில் இருப்பதால், எங்களின் நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஒரு சில அரசு அதிகாரிகளே எங்களை மிரட்டுகிறார்கள். இரவில் வந்து, 'கையெழுத்துப் போடு, இல்லையென்றால் இங்கு யாருமே இருக்க மாட்டீங்க' என்று யார் யாரோ வந்து மிரட்டுகிறார்கள்.

பொதுமக்கள் எதிர்ப்பு

காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தோம். 'இதோ... அதோ நடவடிக்கை எடுக்கிறோம்' என்கிறார்கள். ஆனா தொடர்ந்து மௌனம் மட்டும் காட்டி வருகிறார்கள். எங்கள் பகுதியில் கல்குவாரி அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்டமாக கல்குவாரி அருகாமையிலே சாலை மறியலில் ஈடுபடுவோம்" என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, ``உயர் அதிகாரிகள் என்ன கூறுகிறார்களோ, அதைத் தான் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். நாங்கள் எதும் புதிதாகச் செய்வதில்லை" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.

"குரூப் 4 தேர்வில் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை; 3 மாதங்களில்..." - TNPSC விளக்கம்!

சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்... மேலும் பார்க்க

Pawan: பவன் கல்யாண் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அனுமதி; கூட்ட நெரிசல் ஆபத்து; வெடிக்கும் சர்ச்சைகள்!

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துண... மேலும் பார்க்க

ஏமன் கொலை வழக்கு: நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா? - வெளியாகும் தகவலின் பின்னணி என்ன?

ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, ஜூலை 16-ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தது.மத்திய அரசு தரப்பிலிருந... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "நானும் கலெக்டர் ஆவேன்" - கனவைச் சொன்ன சிறுமி; நெகிழ வைத்த கலெக்டர்; என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறோம்.பெற்றோரை இழந்த நிலையில்,... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகள்; தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழிற்சாலைகள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவின் கீழ் 400 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1080 பட்டாசு... மேலும் பார்க்க

வாணியம்பாடி: இடிந்து விழும் நிலையில் நூலகம்; சேதமடையும் புத்தகங்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500 வாசகர்களுடனும், காலை மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்லும் அறி... மேலும் பார்க்க