புதுச்சேரி: அரசுப் பணிகளில் கொல்லைப்புற பணி நியமனங்கள்! - சர்ச்சை வளையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத புதுச்சேரி அரசு
புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2011 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் ரங்கசாமியால், பல்நோக்கு ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 1,000 பேர் விதிகளை மீறி பணியமர்த்தப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கடந்த 2023-ம் ஆண்டு பணி நிரந்தரமும் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, `புதுச்சேரியில் அனைத்து அரசுத் துறைகளிலும் கொல்லைப்புற பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. அதனால் படித்த இளைஞர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் பறிக்கப்டுகின்றன.
எனவே இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் அந்தப் பணிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும்’ என்று 10-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதில் அப்போதைய தலைமை செயலர் ராஜீவ்வர்மா, செயலர் மணிகண்டன் மீதும் குற்றம்சுமத்தியிருந்தனர். கடந்த 2025 பிப்ரவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
பொதுப்பணித்துறை உள்ளிட்ட எந்த ஒரு அரசுத் துறையாக இருந்தாலும் அதில் கொல்லைப்புற நியமனம் கூடாது. நேரடி நியமனம் மூலம் மட்டுமே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்’ என்று புதுச்சேரி அரசுக்கு குட்டு வைத்து அதிரடி காட்டியிருந்தது நீதிமன்றம்.
ஆனால் அந்த உத்தரவை பிறப்பித்து ஒரு ஆண்டு கடந்தும், புதுச்சேரி அரசு அதன் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால் அப்போதைய தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
`கொல்லைப்புற பணி நியமனத்துக்கு ஆளுநர்தான் ஒப்புதல் அளித்தார்...’
அதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார், அப்போதைய தலைமை செயலாளர். அதில், `நான் தற்போது சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலராக பணியாற்றி வருகிறேன்.
கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி முதல் 2024 ஜனவரி 28-ம் தேதி வரை புதுச்சேரி தலைமை செயலராக பணியாற்றினேன். தற்போது புதுச்சேரியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதால் எந்த கோப்புகளையும் என்னால் நேரடியாக அணுக முடியாது.
முதலில் நீதிமன்றத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஊழியர்கள் பணி நியமனம், அப்போதைய துணைநிலை ஆளுநர் அவர்களால் நேரடியாக செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி ஆட்சேர்ப்பு விதிகளை மீறி, இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்வதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதனால் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் அந்தக் கோப்பை நேரடியாக முதல்வருக்கு அனுப்பினார்.
முதல்வர் அப்போதைய துணைநிலை ஆளுநருக்கு முன்மொழிவை அனுப்பினார். அதன்பிறகு துணைநிலை ஆளுநர்தான் இந்தக் கோப்புக்கு ஒப்புதல் அளித்தாரே தவிர, நான் எந்த ஒப்புதலையும் அளிக்கவில்லை.
அதனால் இது போன்ற சூழலில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதோடு, இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த கொல்லைப்புற பணி நியமனம் நடைபெற்ற காலகட்டத்தில் துணைநிலை ஆளுநராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.