"இதைக் கூறுபவர்கள் முதலில்..." - சொந்தக் கட்சித் தலைவர் பேச்சுக்கு சசி தரூர் எதிர்வினை!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக `ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதிலிருந்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் மோடி மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளைக் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டி பேசி வருகிறார்.
மறுபக்கம், இதே விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை முன்வைத்து மோடியின் மௌனம் மற்றும் மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்த காங்கிரஸ், சசி தரூரின் பேச்சுக்களால் அதிருப்தியானது.

இதை மேலும் பெரிதாக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க அமைக்கப்பட்ட குழுவில் காங்கிரஸ் பரிந்துரைக்காத சசி தரூரை சேர்த்து, அக்குழுவுக்கு அவரை தலைவராகவும் நியமித்தது மத்திய பா.ஜ.க அரசு.
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க இதை வேண்டுமென்றே செய்கிறது எனக் காங்கிரஸ் விமர்சிக்க, அதற்கு நேரேதிராக "மோடியின் ஆற்றல் உலக அரங்கில் இந்தியாவிற்கு முக்கிய சொத்தாக இருக்கிறது" என மோடியைப் பாராட்டி கட்டுரையெல்லாம் எழுதினார் சசி தரூர்.
கட்சிக்குள்ளிருந்து எதிர்ப்புகள் எழுந்தபோதும், கட்சிக்காகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என்றும், கட்சியை விட தேசத்தின் நலனே முக்கியம் என்றும் சசி தரூர் கூறிவந்தார்.
இதனால், தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் சசி தரூர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரை அவர் காங்கிரஸில் ஒருவராகக் கருதப்பட மாட்டார் என்றும், மாநில தலைநகரில் (சசி தரூர் எம்.பி தொகுதி திருவனந்தபுரம்) நடக்கும் எந்த காங்கிரஸ் நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட மாட்டார் என்றும் கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளிதரன் வெளிப்படையாகக் கூறினார்.
#WATCH | Delhi: On statements by Congress leaders against him, Congress MP Shashi Tharoor says, "The people who are saying this should have some basis for saying so. Who are they? I want to know. Then we will see. Don't ask me about the behaviour of others. I can talk about my… pic.twitter.com/KDJF1Un21D
— ANI (@ANI) July 22, 2025
இவ்வாறிருக்க, நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே சசி தரூரிடம் கே.முரளிதரனின் கூற்று குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்.
அதற்கு சசி தரூர், "இவ்வாறு கூறுபவர்கள் முதலில் அப்படிச் சொல்வதற்கு ஏதேனும் அடிப்படையைக் கொண்டிருக்க வேண்டும்.
அவர்கள் யார் என்று எனக்குத் தெரிய வேண்டும். மற்றவர்களின் நடத்தை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். என்னுடைய நடத்தை பற்றிதான் நான் பேச முடியும்" என்று பதிலளித்தார்.