”திமுக-வுக்கு 8 மாதம்தான் ஆயுள்; இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தை சொல்லலாமே!”- எடப்பாடி பழனிசாமி
தஞ்சாவூரில், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு ஆகிய தொகுதிகளில் பேசினார். தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரே பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமியுடன் ஆர்.காமராஜ், மா.சேகர் உள்ளிட்டோர் வந்தனர். மாநகர செயலாளர் சரவணன், எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி செங்கோல் மற்றும் நெற்கதிர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசத்தொடங்கியதும், அந்த பி.ஜே.பி கொடியை கீழே இறக்குங்க மறைக்குது என்றார். ``முதல்வர் ஸ்டாலின் 50 மாதங்களை வீணாக்கி விட்டார். மக்களுக்கு பிரச்னை என்றால் ஓடோடி அ.தி.மு.க வந்தது. குரூப் 4 தேர்வு 13 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. வினாத்தாளில் பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்க படவில்லை. இதனால் பலரும் தேர்வு எழுத முடியவில்லை. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள்களை முறையாக சீல் வைக்கவில்லை. எனவே குரூப் 4 தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும். இந்த தேர்ச்சியை வைத்து பணி அமர்த்தினால், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அந்த பணியிடங்கள் ரத்து செய்யப்படும்.
அ.தி.மு.க ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என ஸ்டாலின் பேசுகிறார். 2011– 2020ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் செய்ததை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். தமிழகத்தில் காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. காவல்துறையை சுதந்திரமாக செயல்படாமல் வைத்துள்ளனர். எனவே போலீஸாரால் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க முடியவில்லை. 2,348 பேர் பள்ளி, கல்லுாரி அருகே கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை செய்ததாக காவல்துறை மானிய கோரிக்கை புத்தகத்தில் இடம்பெற்று இருந்தது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் 148 பேர் தான். மீதம் உள்ள நபர்கள் தி.மு.கவை சேர்ந்தவர்கள்.

தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து பேட்டிக்கொடுக்க நான்கு துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, மக்களிடம் இருந்து 1 கோடி 5 லட்சம் மனுக்களை பெறப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடி ஒரு லட்சம் மனுக்கள் தீர்வு கண்டதாக கூறுகிறார். அந்த ஐ.ஏ.எஸ்., கூறிய தேதியில் 27 லட்சம் மனுக்கள் தான் வந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் இது குறித்து விசாரிக்கப்படும். தி.மு.கவுக்கு தான் சிறுபான்மை ஓட்டு என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தி.மு.க சிறுபான்மை மக்களை ஏமாற்றுகிறது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெற அமைப்பது கூட்டணி, அ.தி.மு.க கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்காது. டெல்டா மாவட்டம் தி.மு.க கோட்டை என ஸ்டாலின் பேசுகிறார். இது அ.தி.மு.க-வின் கோட்டை. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வோளண் மண்டலமாக அ.தி.மு.க கொண்டு வந்தது. எந்த கொம்பனாலும் டெல்டா மாவட்டத்தை தோண்ட முடியது. இந்த மண்ணை பாதுகாத்தோம். நான் மக்களை ஏமாற்றி ஓட்டு கேட்கவில்லை. அ.தி.மு.க-வை உடைக்க, முடக்க ஸ்டாலின் எத்தனையோ அவதாரம் எடுத்தார். அத்தனை அவதாரமும் துாள் துாளாக எங்கள் கட்சியினர் நொறுக்கி விட்டனர்.

முதல்வர் பதவி என்ன தி.மு.க-வின் குடும்ப சொத்தா, தமிழகம் தி.மு.கவுக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டு விட்டதா, அ.தி.மு.க குடும்ப கட்சி கிடையாது. இந்தியாவில் மன்னர்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. தி.மு.க., மன்னர் ஆட்சியை கொண்டு வர துடிக்கிறது. குடும்ப ஆட்சி, வாரிசு தேவையா இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026 தான். கருணாநிதி குடும்பத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும். தி.மு.க-வுக்காக உழைத்தவர்களை ஸ்டாலின் ஒரம் கட்டி வைத்துள்ளார். துரைமுருகன் தி.மு.க.,வுக்காக உழைத்தவர். அவருக்கு துணை முதல்வர் பதவி இல்லை.
அ.தி.மு.க,வில் உழைப்பவர்களுக்கு தான் இடம். அ.தி.மு.க யாருடன் கூட்டணி வைத்தால் ஸ்டாலினுக்கு என்ன, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால், ஸ்டாலின் அப்செட்டாகி உள்ளார். வி.சி.க-வை இன்னும் கொஞ்சம் நாளில் தி.மு.க விழுங்கி விடும். தமிழகத்தை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க- தான். மக்கள் மீது வரிகளால் பல சுமைகளை சுமத்தி விட்டனர். தி.மு.க-வுக்கு எட்டு மாதம் தான் ஆயுள். இப்போதாவது, நீட் தேர்வு ரத்து ரகசியத்தை சொல்லுங்கள், மக்கள் தெரிந்துக்கொள்ளட்டும், பொய் சொல்வதற்கு நோபல் பரிசு வழங்கினால் அதை ஸ்டாலினுக்கு தான் வழங்க வேண்டும்.

நீதிமன்றத்தை நாடி தடை வாங்க முயன்ற அ.தி.மு.க.,விற்கு நீதிமன்றம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசி விட்டது என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். நாங்கள் ஓ.டி.பி வாங்க கூடாது என்று தான் கூறினோம். ஆர்.எஸ்.பாரதிக்கு வயதாகி விட்டதால் ஏதோ ஏதோ பேசுகிறார். தி.மு.க., மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது. உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. தி.மு.க., வரலாற்றில் இல்லாத வகையில் வீடு வீடாக சென்று உறுப்பினர்கள் சேர்த்து வருகிறது. ஸ்டாலின், உதயநிதி வந்த பிறகு தி.மு.க.,வில் உறுப்பினர்கள் குறைந்து விட்டனர். ஒராணியில் தமிழ்நாடு என பெயர் சூட்டி உறுப்பினர்களை பிச்சை எடுக்கிறார்கள். தி.மு.க., கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை ஆகி விட்டது" என்றார்.
எடப்பாடி பழனிசாமி வருகைக்காக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பேராவூரணி செல்லும் வழியில் அவரை வரவேற்று கட்சியினர் ப்ளக்ஸ் வைத்திருந்தனர். வைத்திலிங்கம் ஏரியாவான ஒரத்தநாடு தொகுதியில் புலவன்காட்டில் இருந்து சுமார் 15 கி.மீ துாரம் வரை வைக்கப்பட்டிருந்த ப்ளக்ஸை மர்ம நபர்கள் கிழித்தனர். வைத்திலிங்கம் ஆதரவாளர் யாராவது இதை செய்திருக்கலாம் என அ.தி.மு.க நிர்வாகிகளால் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.