சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்: ஸ்ரீவாஸ்தவா உறுதி!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல் சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உறுதி அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 36-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட எம்.எம்.ஸ்ரீவாஸ்தவாவுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் புதிய தலைமை நீதிபதியை, வரவேற்றுப் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், நீதி பரிபாலனத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்குரைஞர்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர காரணமாக இருந்த தலைமை நீதிபதி மூலமாக தமிழகத்திலும் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்புவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.
இதே போல பல்வேறு வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகளும் புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர். பின்னர் ஏற்புரையில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீ வாஸ்தவா பேசியது:
"1892-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் சாவியைப் பெற்றுக்கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி சர் ஆர்தர் கோலன், எந்த பாகுபாடும் இல்லாமல் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மரபை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல் சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்" என்று உறுதி அளித்தார்.
மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, திறமையான வெளிப்படைத்தன்மையுடன் நீதி நிர்வாகம் நடத்தப்படும். வழக்குரைஞர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றுவேன் என உறுதி அளித்தார்.
இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: மருத்துவமனையிலிருந்து அலுவல்களைக் கவனிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்!