பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?
பெங்களூரில் கடந்த புதன்கிழமை காணாமல் போன 13 வயது பள்ளி மாணவன், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெற்கு பெங்களூரில் உள்ள அரேகெரே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரின் மகன் நிஷ்சித் (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த புதன்கிழமை டியூசன் சென்ற நிஷ்சித், வழக்கமாக வீட்டுக்கு திரும்பும் நேரமான 7.30 மணியைக் கடந்தும் வராததால் பதற்றமடைந்த பெற்றோர் ஆசிரியருக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால், நிஷ்சித் புறப்பட்டு விட்டதாக ஆசிரியர் கூறியதைத் தொடர்ந்து மாணவனைப் பெற்றோர் தேடிச் சென்றுள்ளனர். நிஷ்சித் வழக்கமாக வீடு திரும்பும் வழித்தடத்தில் அவரது சைக்கிள் கிடந்ததை தொடர்ந்து, காவல் நிலையத்தில் அன்றிரவே புகார் அளித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் புகாரைப் பெற்ற காவல்துறையினர் தேடுதல் பணியைத் தொடங்கினர்.
மாணவன் சடலமாக மீட்பு
புதன்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் நிஷ்சித்தின் தந்தைக்கு ரூ. 5 லட்சம் பணம் கேட்டு மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளார்.
பணம் கொடுப்பதாக நிஷ்சித்தின் தந்தை கூறியதைத் தொடர்ந்து, மர்ம நபர் பல்வேறு இடங்களை மாறிமாறி கூறியுள்ளார், இறுதியில் செல்போனை அணைத்துள்ளார்.
இந்த நிலையில், பன்னேர்கட்டா - கோட்டிகெரே சாலையில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் நிஷ்சித்தின் சடலம் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. நிசித்தின் பெற்றோரும் தங்கள் மகன்தான் என்று அடையாளத்தை உறுதி செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நிஷ்சித்தை ஒருவர் வழிமறிந்து இருசக்கர வாகனத்தில் கூட்டிச் செல்லும் காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, சிறுவனைக் கடத்தியது நிஷ்சித் தந்தையின் முன்னாள் கார் ஓட்டுநர் குருமூர்த்தியாக இருக்கக் கூடும் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர்.
இந்த நிலையில், கக்கலிபுரா சாலை அருகே ஹுலிமாவு காவல் நிலையத்தின் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் குருமூர்த்தியைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவரிடம் விசாரணை நடத்த முயற்சித்தபோது, குருமூர்த்தியும் அவரது கூட்டாளி கோபால கிருஷ்ணாவும் காவலர்களை கத்தியால் குத்த முயற்சித்துள்ளனர்.
இதையடுத்து தற்காப்புக்காக இருவரையும் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்துள்ளனர்.
குருமூர்த்தி இரு கால்களிலும் கோபிகிருஷ்ணாவுக்கு வலது காலிலும் துப்பாக்கியால் சுட்டதில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பணம் கேட்டு மிரட்டல் வந்த செல்போன் எண் மற்றும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றவரை உறுதி செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.