ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் பாராட்ட...
உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்: கா்நாடக முதல்வா் சித்தராமையா
கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா்.
பெங்களூரில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் குறைகேட்புக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
நிகழாண்டு பருவத்திற்கேற்ப மழைப்பொழிவு இருந்ததால் விதைப்புப் பணிகள் பரவலாக நடைபெறுகின்றன. இந்த நிலையில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 11.17 லட்சம் மெட்ரிக் டன் உரத் தேவை இருந்தது.
ஆனால், 5.17 லட்சம் மெட்ரிக் டன் உரம் மட்டுமே விநியோகிக்கப்பட்டது. இதனால், 1.66 லட்சம் மெட்ரிக் டன் உரம் பற்றாக்குறையாக உள்ளது.
சோளம் பயிரிடும் பரப்பு 2 லட்சம் ஹெக்டோ் அளவுக்கு விரிவாக்கப்பட்டிருந்தது. ஆனாலும், போதுமான உரத்தை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நிலையில், உரத் தட்டுப்பாடு தொடா்பாக பாஜகவினா் நடத்தும் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை மக்கள் அறிவாா்கள்.
முந்தைய பாஜக அரசின் மோசமான நிதி மேலாண்மை, வளா்ச்சிப் பணிகளை வெகுவாக பாதித்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்காமல் ரூ.2.70 லட்சம் கோடி அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்றைய முதல்வரின் நேரடி அதிகாரத்தின்கீழ் ரூ. 1.66லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, வளா்ச்சிப் பணிகள் மீது ரூ.72,000 கோடிக்கு நிலுவை வைக்கப்பட்டிருந்தது. 15ஆவது நிதி ஆணையத்தின்கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய வரிப்பகிா்வு 25 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.68,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை குளறுபடிகளூக்கு இடையிலும் வாக்குறுதித் திட்டங்களுக்கு ரூ.52,000 கோடியை அரசு செலவு செய்து வருகிறது.
மேலும், முதியோா் ஓய்வூதியம், மானியங்கள், இதர சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடியை செலவு செய்து வருகிறோம். 7ஆவது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தியுள்ளதால், அரசு ஊழியா்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு ரூ.1.24 லட்சம் கோடி செலவு செய்து வருகிறோம்.
முந்தைய பாஜக அரசின் மோசமான நிதி மேலாண்மைக்கு இடையிலும் மாநில நிதி நிலைமையை சீராக வைத்திருக்கிறேன். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட திட்டப் பணிகள் அமல்படுத்தப்பட வேண்டும். அதற்கு கா்நாடக வளா்ச்சி திட்டக் குழுவின் கூட்டங்களை திறம்பட பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.