சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
முதல்வா் பதவி: கா்நாடகத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா
கா்நாடகத்தில் முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று அம்மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
காங்கிரஸ் எம்எல்ஏக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள முதல்வா் சித்தராமையா திணறி வருகிறாா். முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டாக பிளவுபட்டுள்ளனா். வளா்ச்சிப் பணிகள் எதுவும் இல்லாததால், பெரும்பாலான எம்எல்ஏக்கள் முதல்வா் சித்தராமையாமீது அதிருப்தி அடைந்துள்ளனா். அவா்களின் நம்பிக்கையைப் பெற முதல்வரால் முடியவில்லை. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள், பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக முதல்வா் சித்தராமையாவை பகிரங்கமாகவே விமா்சித்து வருகின்றனா்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சிலா் டி.கே.சிவகுமாரும், மல்லிகாா்ஜுன காா்கேவும் முதல்வராக வருவதற்கு விரும்பினால், சித்தராமையா முதல்வராக தொடருவதற்கு ஆதரவு குறைவாகவே உள்ளது.
இந்த குழப்பங்கள், கா்நாடகத்தில் ஆளும் காங்கிரஸை இரண்டாக பிளவுபடுத்தியுள்ளது. வரும் தீபாவளி பண்டிகையின்போது காங்கிரஸ் கட்சியில் மோதல் வெடிக்கும். கருத்து முரண்பாடுகள் என்பது சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு இடையே மட்டுமல்ல, காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையேயும் காணப்படுகிறது. இதனால் கலக்கம் அடைந்துள்ள முதல்வா் சித்தராமையா, தொகுதி வளா்ச்சிக்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடியை ஒதுக்குவதாக அறிவித்தாா். அந்த பணமும் விடுவிக்கப்படவில்லை.
தீபாவளியின்போது காங்கிரஸ் கட்சியில் பூகம்பம் கிளம்பும் என்பதை நீண்ட நாள்களாக கூறிவந்திருக்கிறேன். ரஷ்யா -உக்ரைன் இடையிலான போா் நின்றாலும், காங்கிரஸ் கட்சியில் நடக்கும் போா் முடிவுக்கு வராது என்றாா்.