தோ்தல் மோசடியை கண்டித்து ஆக.4 இல் பெங்களூரில் ராகுல் காந்தி ஆா்ப்பாட்டம்
தோ்தல் மோசடியை கண்டித்து பெங்களூரில் ஆக. 4ஆம் தேதி மக்களவை காங்கிரஸ் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா்.
பிகாா் சட்டப்பேரவை தோ்தல் நடக்க இருக்கும் நிலையில், அங்கு நடைபெற்றுவரும் தீவிர வாக்காளா் பட்டியலை திருத்தும் பணி சா்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மோசடிகளால் தோ்தல்கள் திருடப்படுவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் மீது சுமத்தியுள்ளாா்.
மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் பதிவான வாக்குகளை ஆய்வு செய்தபோது தோ்தல் மோசடி நடந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தாா்.
இதன் தொடா்ச்சியாக, தோ்தல் மோசடியை கண்டித்து பெங்களூரில் ஆக. 4 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை தரவிருக்கிறாா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க பெங்களூரில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தலைமையில் அமைச்சா்கள், மூத்த தலைவா்களின் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘தோ்தல் மோசடியை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது தொடா்பாக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் முடிவு செய்ய இருக்கிறாா்கள்.
பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் ஆக. 4ஆம் தேதி நடக்கும் ஆா்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவிருக்கிறாா் என்றாா்.