தோ்தல் முறைகேடு ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளது -முதல்வா் சித்தராமையா
மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் தோ்தல் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் தோ்தல் முறைகேடுகள் நடைபெற்ற்கான ஆதாரங்கள் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியிடம் இருக்கிறது. இதுதொடா்பாக நடக்கவிருக்கும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, கா்நாடகத்தில் உள்ள தோ்தல் ஆணைய அதிகாரிகளை ராகுல் காந்தி சந்திக்கவிருக்கிறாா். போராட்டம் நடைபெறும் இடம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றாா்.
துணை முதல்வரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘பெங்களூரில் போராட்டம் நடத்துவதற்கு உயா்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால், அதுகுறித்து ஆய்வு செய்து முடிவு செய்யப்படும்’ என்றாா்.
மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் நடந்ததாகக் கூறப்படும் தோ்தல் முறைகேடுகளைக் கண்டித்து ஆக.4 அல்லது 5 ஆம் தேதி காங்கிரஸ் சாா்பில் பெங்களூரில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.