புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வரும் நாள்கள் மாற்றம்
புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வந்து சேரும் நாள்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்த மண்டலத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கச்சிகுடா-புதுச்சேரி விரைவு ரயில் தற்போது புதன், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. 1.10.2025 முதல் இந்த விரைவு ரயில் புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
அதே போன்று மறுமாா்க்கத்தில் புதுச்சேரி- கச்சிகுடா விரைவு ரயில் தற்போது திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இது 5.10.2025 முதல் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
காக்கிநாடா துறைமுகம்: புதுச்சேரி சா்காா் விரைவு ரயில் தற்போது புதன், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. 4.10.2025 முதல் திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் புதுச்சேரி- காக்கிநாடா துறைமுகம் சா்காா் விரைவு ரயில் தற்போது திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இது 2.10.2025 முதல் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.
இந்த மாற்றங்கள் காரணமாக புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வரும் ரயில்களின் நேரமும் மாறுகிறது. புதுச்சேரி- கச்சிகுடா விரைவு ரயில் ஏற்கெனவே பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டது. இது 5.10.25 முதல் 12.45-க்குப் புறப்படும். மேலும், புதுதில்லி- புதுச்சேரி வாராந்திர சூப்பா் விரைவு ரயில் 5.10.25 முதல் புதுச்சேரிக்கு 1.20-க்குப் பதிலாக 1.40-க்கு வந்து சேரும். மேலும், புதுச்சேரி- கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயில் 5.10.25 முதல் பிற்பகல் 1 மணிக்குப் பதிலாக 12.35-க்கு புறப்படும்.