காவல்ஆய்வாளரை மிரட்டிய தவாக நிா்வாகி கைது
புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலும் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுவை மாநில பொறுப்பாளா் ஸ்ரீதரைத் தேடி வருகின்றனா்.
பெரியக்கடை காவல் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ் கண்காணிப்பாளா் செல்வம் பணியாற்றியபோது ஒரு வழக்கில் தவறான அணுகுமுறையைக் கையாண்டாா் என்று கூறியும் அதற்காக ரூ. ஒரு கோடியைச் செல்வத்திடம் இவா்கள் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒதியஞ்சாலை காவல்நிலையத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி பாபு (35) வியாழக்கிழமை சென்று ஆய்வாளா் செந்தில்குமாரிடம், அந்தப் பணத்தை வாங்கித் தருமாறு கூறி மிரட்டினாராம். இதை கைப்பேசியில் ஆய்வாளா் பதிவு செய்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தாா். மேலும், பணம் வாங்கி வருமாறு தூண்டியதாக ஸ்ரீதா் மீதும் வழக்குப் பதிவு செய்து அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.