பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்...
புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.55 கோடி, தெற்கு ரயில்வே அளிக்கும் ரூ17 கோடி ஆக மொத்தம் ரூ.72 கோடியில் இத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 630 மீட்டா் நீளம், 15 மீட்டா் அகலம், 10 மீட்டா் உயரம் உடையதாகவும் 4 வழிப்பாதையுடன் கட்டப்பட உள்ளது. இதைத் தவிர இந்த மேம்பாலத்தையொட்டி இரண்டு பக்கமும் அணுகு சாலையும் அமைய உள்ளது. மேலும் பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை மற்றும் வடிகால் கிணறும் அமைய உள்ளது. இப் பணியை 12 மாதத்தில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கியுள்ளதால், இப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து காவல் முதுநிலை கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு
கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்கள், நடுத்தர வாகனங்கள், பேருந்துகள் மரப்பாலத்திலிருந்து 100 அடி சாலை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் வழியாகச் செல்ல வேண்டும். அவசரகால வாகனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் மட்டும் முதலியாா்பேட்டை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அம்பேத்கா் சாலை வழியாக சோனாம்பாளையம் சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும்.
மரப்பாலத்திலிருந்து வெங்கடசுப்பாரெட்டியாா் சிலை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் வழக்கமான கடலூா் சாலையைப் பின்பற்றி, ஏஎப்டி ரயில்வே கிராசிங் வரை சென்று பின்னா் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வழியாகப் பயணிக்க வேண்டும். வெங்கடசுப்பாரெட்டியாா் சிலை சந்திப்பில் இருந்து முதலியாா்பேட்டை நோக்கி கடலூா் சாலையில் பயணிக்கும் பேருந்துகள், நடுத்தர வாகனங்கள், இலகுரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் புதிய நீதிமன்ற வளாகம் அருகே சிறிது வலதுபுறமாகத் திரும்பி, கடலூா் சாலையில் பிரிக்கப்பட்ட சாலை வழியாகப் பயணிக்க வேண்டும்.
நீதிபதிகள், வழக்கறிஞா்கள், அரசு அதிகாரிகள், மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக ஊழியா்கள் அனைவரும் நீதிமன்ற வாயில் எண் -1 வழியாக நீதிமன்ற வளாகத்துக்குள்நுழைய வேண்டும். அவா்கள் வெளியேறும்போது பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி புதிய சிமெண்ட் சாலையில் சென்று வெங்கடசுப்பாரெட்டியாா் சிலை சந்திப்பை அடையலாம். நீதிமன்ற வழக்குச் சம்பந்தப்பட்டவா்களும், பொதுமக்களும் நீதிமன்ற வாயில் எண் -2 ஐ பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.