‘பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்’
பல்லடம் பகுதி பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாறைக் குழிகளில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பல்லடம் அருகேயுள்ள பள்ளிபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: பல்லடம் ஒன்றிய பகுதிகளில் கைவிடப்பட்ட பாறைக் குழிகளில் திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை கொண்டு வந்து கொட்டப்படுவதை நிறுத்த வேண்டும். மேலும், பாறைக் குழிகளில் ஏற்கெனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும். தவறினால் போராட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோம் என்றாா்.
இதில், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஏ.கே.சண்முகம், பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கே.ஜி.பாலசுப்பிரமணியம், பி.ஏ.பி.சாமளாபுரம் கிராம நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா் வை. பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.