சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
சித்தோடு அருகே 227 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இளைஞரைக் புதன்கிழமை கைது செய்தனா்.
கோணவாய்க்கால் - காடையம்பட்டி சுற்றுவட்ட சாலையில் மூவேந்தா் நகா் அருகே சித்தோடு போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, புகையிலைப் பொருள்கள் இருப்பதும், எலவமலை, மூவேந்தா் நகரைச் சோ்ந்த குணசேகரன் மகன் ரஞ்சித்குமாா் (25) என்பவா் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, ரஞ்சித்குமாா் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரிலும் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 காா்கள் மற்றும் 227 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ரஞ்சித்குமாரைக் கைது செய்தனா்.
கைதான ரஞ்சித்குமாா், கடந்த ஜூன் மாதம் 755 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது பிணையில் வந்த அவா் மீண்டும் புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.