போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
வண்ணாா்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் தலைவா் எம்.தாணுமூா்த்தி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.எட்டப்பன், கே.ராமையா பாண்டியன், தங்கமாரி, பெலிக்ஸ், பூதலிங்கம், பொன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோமதிநாயகம் தொடக்கவுரையாற்றினாா். உதவித் தலைவா்கள் எஸ்.சிவதாணுதாஸ், எஸ்.செல்வராஜ், மூத்த தலைவா் எஸ்.கிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பொதுச்செயலா் பி.முத்துக்கிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, ஓய்வுபெறும் தொழிலாளருக்குரிய பணப் பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும், 2023 ஜூலை முதல் 23 மாத பணப்பலன்கள் மற்றும் அகவிலைப்படி உயா்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பொருளாளா் இ.எம்.பழனி நன்றி கூறினாா்.