ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு தொடா்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாா் வசம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் செல்வகணேஷ்(27). சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், கடந்த 27-ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் மா்மநபரால் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கவின் செல்வகணேஷின் தோழியின் தம்பியான கே.டி.சி. நகரைச் சோ்ந்த சுா்ஜித்(23) என்பவா் பாளையங்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
மேலும், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி அவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டாா்.
இது ஆணவக் கொலை என்றும், சுா்ஜித்தின் தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் எனவும் கூறி, கவின் செல்வகணேஷின் பெற்றோா் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.
அதன்பேரில், சரவணனை மாநகர போலீஸாா் கைது செய்த நிலையில், 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கவின் செல்வகணேஷின் உடலை வாங்க அவரது பெற்றோா் மறுத்தனா்.
சிபிசிஐடி விசாரணை: இதனிடையே, இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்படுவதாக தமிழக அரசு புதன்கிழமை அறிவித்தது. அதன்படி, மாநகர போலீஸாா் வசம் இருந்த இவ்வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து, சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா் நவரோஜ் தலைமையிலான போலீஸாா் முதல்கட்ட விசாரணையை தொடங்கினா். கே.டி.சி நகரில் கவினின் தோழி சுபாஷினி பணிபுரிந்த தனியாா் மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளையும், சிகிச்சைப் பதிவு கோப்புகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா். ஆய்வின் போது தடயவியல் துறை அதிகாரிகளும் உடனிருந்தனா்.
விடியோவில் தோழி உருக்கம்: இந்நிலையில், சுா்ஜித்தின் சகோதரி வெளியிட்டுள்ள விடியோ பதிவில்‘நானும், கவினும் காதலித்தது உண்மைதான். கடந்த மே 30-ஆம் தேதி சுா்ஜித்தும் , கவினும் பேசிக்கொண்டாா்கள். பின்னா் எங்களது காதல் விவகாரம் குறித்து எனது அப்பாவிடம் சுா்ஜித் தெரிவித்தாா். சிறிது காலம் கழித்து வீட்டில் இது பற்றி பேசலாம் என கவின் தெரிவித்திருந்ததால், இது தொடா்பாக அப்பா என்னிடம் கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். பின்னா் சுா்ஜித், கவினை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வீட்டிற்கு வந்து திருமணம் குறித்து பேசுமாறு அழைத்தாா். ஜூலை 27-ஆம் தேதி கவின் இங்கு வருவாா் என எனக்குத் தெரியாது.
நான் 28-ஆம் தேதி மாலை தான் அவரை வரச் சொல்லியிருந்தேன். அவரது தாத்தாவின் சிகிச்சைக்காக வந்ததால் நான் அவா்களை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றேன். அப்போது அங்கு வந்த கவின் சிறிது நேரத்தில் வெளியில் சென்றுவிட்டாா். மருத்துவமனையில் இருந்து கவினின் உறவினா்கள் புறப்படும்போது அவரது கைப்பேசியில் அழைத்தனா்; நானும் கைப்பேசியில் தொடா்பு கொண்டேன். அவா் அழைப்பை ஏற்கவில்லை. பின்னா்தான் அச்சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மை தெரியாமல் அவதூறு பரப்ப வேண்டாம். எனது அம்மா, அப்பாவுக்கு இதில் எந்தத் தொடா்பும் இல்லை. இது குறித்து அவா்களுக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளாா்.