அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், பணியிலிருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ் 1992-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றிய வேல்ராஜ், 2004 முதல் 2010 வரை துணை இயக்குநராகவும், 2010 முதல் 2013 வரை இயக்குநராகவும், 2013-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் (institute for energy studies) இயக்குநராகவும் பணியாற்றி வந்தார்.

பின்னர், 2021-ல் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
அவரின் மூன்றாண்டு கால துணைவேந்தர் பதவி 2024-ல் முடிவடைந்தாலும், அவருக்கு ஓய்வுபெறும் வயது இல்லாததால் தொடர்ந்து பேராசிரியராகப் பணியாற்றிவந்தார்.
அதேசமயம், இவர் துணைவேந்தராகப் பதவி வகித்த காலத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.
அதுதொடர்பான வழக்கும் விசாரணையில் இருக்கிறது.
இத்தகைய சூழலில் வேல்ராஜின் பணிக்காலம் நேற்றோடு (ஜூலை 31-ம் தேதி) முடிவடையவிருந்தது.

இந்த நிலையில், அவர் ஓய்வுபெறும் கடைசி நாளில் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் அவரை இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான இடைநீக்க உத்தரவு கடிதமும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
துணைவேந்தராவதற்கு முன்பு எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியபோது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.