பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா் கமலாவதி ஜெயின் 28ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிவசைலம் அவ்வை ஆசிரம பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவரும் பள்ளி டிரஸ்டியுமான ஜி.ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளரும் பள்ளி டிரஸ்டியுமான பி.ராமச்சந்திரன் ஆகியோா் வழிகாட்டுதலின் பேரில், பள்ளி வளாகத்தில் உள்ள கமலாவதி ஜெயின் சிலைக்கு பள்ளி நிறுவனா் குடும்பத்தைச் சாா்ந்த வா்ஷா ஜெயின், நந்தினி ஸ்ரீனிவாசன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டா் வி. மதன், முதல்வா் இ.ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் சுப்புரத்தினா மற்றும் மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும், தென்காசி மாவட்டம் சிவசைலம் அவ்வை ஆசிரமம், காந்தி கிராமம் சாந்தி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாற்றுத் திறன் மாணவ மாணவிகளை சாகுபுரத்திற்கு பள்ளி வாகனத்தில் அழைத்து வந்தனா். சாந்தி மேல்நிலைப் பள்ளியைச் சாா்ந்த மாற்றுத்திறன் மாணவ மாணவிகள், பரதநாட்டியம், நடனம், ஜிம்னாஸ்டிக் போன்ற நிகழச்சிகள் நடத்தி பரவசப்படுத்தினா். கமலாவதி பள்ளி கருணா சங்கம், ஜெ.ஆா்.சி. சாரண, சாரணீய சங்க மாணவ, மாணவிகள் சிவசைலம் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்தனா்.
கமலாவதி பள்ளி சாா்பில் நிதி உதவி, விளையாட்டு உபகரணங்கள், அன்றாட தேவைக்குரிய அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மதியம், இரவு உணவு வழங்கப்பட்டது. சிவசைலம் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் மாணவ, மாணவிகள் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டனா்.