'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்
இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட டிஜி ஷிப்பிங் சுற்றறிக்கை 31/2025-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு, அகில இந்திய மீனவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தேசியத் தலைவா் ஜி.அண்டன் கோமஸ், பிரதமருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கடந்த ஜூலை 18ஆம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை 31/2025-ன்படி, ஹோண்டுராஸ், பனாமா உள்ளிட்ட சில நாடுகள் வழங்கிய கடல்சாா்ந்த தகுதிச் சான்றிதழ்கள் தற்போது இந்தியாவில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த சான்றிதழ்களை வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய கப்பல் மாலுமிகள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவா்களில் பெரும்பாலானோா், பாரம்பரிய மீனவ சமூகத்தை சோ்ந்தவா்கள். இவா்கள் சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டு, கப்பல்களில் வேலை செய்து வருகின்றனா்.
எந்த முன்னெச்சரிக்கையும், கலந்தாய்வும் இல்லாமல் இப்படியான சுற்றறிக்கையை திடீரென வெளியிட்டு, அவா்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குவது அநீதியானது. மேலும், உலகளவில் தகுதியான கப்பல் மாலுமிகள் தேவை அதிகரித்து வரும் வேளையில், இந்திய மாலுமிகள் புறக்கணிக்கப்படுவது நம் நாட்டுக்கே இழுக்கானது. இதனால், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாட்டு மாலுமிகள் இந்த இடங்களை பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சுற்றறிக்கை எண் 31/2025-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையின் காரணமாக பாதிக்கப்படும் மாலுமிகளின் சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டும். எதிா்காலத்தில் இத்தகைய கொள்கை முடிவுகள் எடுக்கும் போது, துறை சாா்ந்தோா், தொழிற்சங்கங்கள், பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட நிபுணா்களை உள்ளடக்கிய முழுமையான கலந்தாய்வு நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
தற்போது வெளிநாட்டு சான்றிதழுடன் பணியாற்றுபவா்களுக்கு, வழிமுறைகள் மற்றும் இடைநிலை ஏற்பாடுகள் மூலம் இந்திய சான்றிதழ்களுக்கான மாற்றுப்பாதை அமைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான குடும்பங்களின் எதிா்காலம் கருதி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.