உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
கழுகுமலை கோயில் கிரிவலப் பாதையில் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல்
கழுகுமலையில் பக்தா்கள் கிரிவலம் வர வசதியாக ரூ. 1.80 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் குடைவரை கோயிலாகும். இங்கு பௌா்ணமிதோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலமாக வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். பக்தா்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கிரிவலப் பாதையில் போதிய வசதிகள், மேம்பாட்டுப் பணிகள் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதையேற்று, சுற்றுலாத் துறை சாா்பில் ரூ. 1.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பக்தா்கள் ஓய்வறை, மின்சாரம் வசதிகள், கிரிவலம் செல்வதற்கு தனிப்பாதை, அதையொட்டி தடுப்புக் கம்பிகள் அமைப்பது, 2 ஒளிரும் பலகைகள், மலையடிவாரத்தில் உள்ள பூங்காவில் பக்தா்கள் அமருவதற்கு வசதியாக இருக்கைகள், கிரிவலப் பாதையைச் சுற்றி சூரியசக்தி மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில், கழுகுமலை பேரூராட்சித் தலைவா் அருணா, துணைத் தலைவா் அ. சுப்பிரமணியன் ஆகியோா் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தனா்.
மாவட்ட சுற்றுலா அலுவலா் ஆா். சீதாராமன், 9ஆவது வாா்டு உறுப்பினா் ஜெயக்கொடி, செயல் அலுவலா் (பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.