MP: காணாமல் போன 23,000 பெண்கள்; 1,500 குற்றவாளிகள் தலைமறைவு - அதிர்ச்சி தகவல்கள்!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜுன் வரையிலான காலகட்டத்தில் 23000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
ம.பி சட்டமன்றம் விதன சபாவில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முன்னாள் உள்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பாலா பச்சன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மாநில பாஜக அரசு கூறிய தகவல்கள் நாடுமுழுவதும் அதிர்ச்சையை எழுப்பியிருக்கிறது.
காணமல் போனவர்களில் 21000க்கும் மேற்பட்ட பெண்களும் 1900க்கும் மேற்பட்ட சிறுமிகளும் அடங்குவார்கள்.
30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 500க்கும் மேலாக இருப்பது தெரியவந்துள்ளது.
மாநிலத்தின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம் போபால், வணிக தலைநகரம் இந்தூர், கலாச்சார மற்றும் நீதித்துறை தலைநகரம் ஜபல்பூர், சாகர், குவாலியர், சத்தர்பூர், தார் மற்றும் ரேவா மாவட்டங்களும் இந்த பட்டியலில் அடங்கும்.
பழங்குடிகள் அதிகமிருக்கும் மாவட்டங்கள் முதல் முக்கிய நகரங்கள் வரை மாநிலம் முழுவதுமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவியிருப்பது இந்த தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

முக்கியமாக பாலியல் வன்கொடுமை, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 1500க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை என மாநில அரசுக் கூறியிருக்கிறது. மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போன வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்ட பலர் பிடிபடவில்லை.
பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 292 குற்றவாளிகள் தலைமறைவாகியிருக்கின்றனர். போலவே சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை/தாக்குதலில் ஈடுபட்ட 282 பேர் தலைமறைவாக உள்ளனர்.
பெண்கள் மீதான பிற பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 443 பேரும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களில் 197 பேரையும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
காணாமல் போன வழக்குகளைப் பொறுத்தவரையில், பெண்கள் தொடர்பானவற்றில் 76 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர், அதே நேரத்தில் மைனர் சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்குகளில் 254 பேர் தலைமறைவாக உள்ளனர்.