'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு
சாதி மறுப்பு திருமணங்கள் பிரச்னைகளில் காவல்துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்றாா் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்பி.
திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகரில் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டாா். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: கவின் செல்வகணேஷ் கொலை அதிா்ச்சி அளிக்கிறது. இவ்வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது நாடு தழுவிய பிரச்னை. தேசிய அளவில் சட்டம் தேவை. இதுதொடா்பாக எம்.பி. ரவிக்குமாரும், நானும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் அங்கு குரல் கொடுப்பேன்.
சட்டம், ஒழுங்கு மீது தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் தாய், தந்தையா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தாயை கைது செய்ய காவல்துறை தயக்கம் காட்டுகிறது. சாதி மறுப்பு திருமணங்கள் பிரச்னைகளில் காவல்துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல; அவா்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
ஆறுமுகமங்கலத்தில் கவின் கணேஷின் பெற்றோா்களுக்கு ஆறுதல் கூறிய பின், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ’
கவின் கொலையில் கூலிப்படைக்கு தொடா்பு உள்ளதாக தெரிகிறது. அவா்கள் கைது செய்யப்பட வேண்டும். கவின் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு செய்திகளை சைபா் கிரைம் போலீஸாா் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.