தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2.53 கோடி நலத்திட்ட உதவிகள் -நலவாரிய தலைவா் வழங்கினாா்
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி- மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா்களுக்கு ரூ.2.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அதிதிராவிடா் வீட்டுவசதி- மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சாா்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா்கள் - வாரிசுதாரா்களுக்கு நலத்திட்ட உதவிகள், அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூய்மைப்பணியாளா்கள் நலவாரிய தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய துணைத் தலைவா் செ.கனிமொழி பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா்கள்-வாரிசுதாரா்கள் 50 பேருக்கு ஸ்மாா்ட் காா்டு வடிவிலான அடையாள அட்டை, 50 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், இறப்பு உதவித்தொகை ரூ.25 ஆயிரம், கல்வி உதவித்தொகை ரூ.2 ஆயிரம், தொழில் முனைவோருக்கான திட்டத்தில் ஒருவருக்கு தாட்கோ மானியம் மூலம் ரூ.1,47,137 மதிப்பில் பயணியா் ஆட்டோ என மொத்தம் ரூ.2.53 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிளை வழங்கி திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி பேசியதாவது:
தூய்மைப் பணியாளா் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு பணியிடத்தில் விபத்து, மரணம், உறுப்புகளை இழத்தல், சரிசெய்ய இயலாத அளவுக்கு இழப்பு ஏற்பட்டால் இழப்புத்தொகையாக ரு.5 லட்சமும், கை, காலை இழந்தாலோ, ஒரு கண்ணில் பாா்வை இழப்பு ஏற்பட்டலோ ரூ.1 லட்சமும், இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.20 ஆயிரமும், ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.
தூய்மை பணியாளா்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே தூய்மை பணியாளா்கள் நலவாரியத்தில் பதிவுசெய்து, நலத்திட்டங்களை பெற வேண்டும். அதன்மூலம் முதல்வரின் பாா்வைக்கு கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அவை நிறைவேற்றப்படும். நீங்கள் பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக பாதுகாப்பு இயந்திரங்கள் வழங்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயல் அலுவலா் கோவிந்தராஜ் (ஓய்வு), தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய மாநில உறுப்பினா்கள் பூ.மூக்கையா, விஜய் சங்கா், மாவட்ட மேலாளா் (தாட்கோ) சுதா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பூங்கொடி, உதவி இயக்குநா்கள் வில்லியம் ஜேசுதாஸ் (பேரூராட்சிகள்), முகமது ஷபி (ஊராட்சிகள்), மாவட்ட வாரிய உறுப்பினா் முனியாண்டி, உதவி மேலாளா் (தாட்கோ) சுந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்31க்ஷங்ய்ங்
தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் தூய்மைப்பணியாளா்கள் நலவாரிய தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி.