கவின் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்
பொறியாளா் கவின் கொலை வழக்கை விசாரிக்க, உயா் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.
பொறியாளா் கவின் கொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டாா். அவா் பேசியது: பொறியாளா் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரே ஜாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற உளவியல் காலம் காலமாக தொடா்வதற்கு சநாதன தா்மமே அடிப்படையாகத் திகழ்கிறது. அரசு தனது திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சோ்க்க வேண்டும் என்பதற்காகவே ஜனநாயகத்தில் சமூகங்கள் அரசால் பிரிக்கப்பட்டது. அது, நிா்வாக வசதிகளுக்காக மட்டுமே. ஆனால், சநாதன தா்மத்தில்தான் ரத்தக் கலப்பு, ஜாதிக் கலப்பு, அகமணம் முறை கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. அகமணம் முறையை இந்திய அரசமைப்புச் சட்டத்தால்கூட தடுக்க முடியவில்லை என்பது வேதனையளிக்கிறது.
புரட்சி பேசும் பலா், இப்போது ஆண்-பெண் திருமண வயதைக் குறைக்க வேண்டும் என்கிறாா்கள். இது பிற்போக்குத்தனமானது. சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்கூட சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி சில இடங்களில் அரசமைப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில்லை என்பது கசப்பான உண்மையாகும். நீதிமன்றங்கள் சொல்வதைக்கூட காவல் துறை கேட்பதில்லை.
புத்தா், திருவள்ளுவா் போன்ற பேரறிவாளா்களின் கருத்துகளை சமூகத்தில் விதைக்காமல், ஜாதிய பெருமிதத்தை பேசும் கும்பல்கள் இப்போது உருவாகியுள்ளன. தலித் என்பது ஒரேயொரு ஜாதியின் பெயரன்று. சா்வதேச அளவிலான சொல்லாடல். ஆணவக் கொலைகளை முற்றிலும் தடுக்க, சமூக விழிப்புணா்வு தேவை. அதற்கு அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஓரணியில் திரள வேண்டும்.
தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். பொறியாளா் கவின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவா்கள் காவல் துறையைச் சோ்ந்தவா்கள் என்பதால் சிபிசிஐடி விசாரணை போதாது. உயா் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2018 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற சக்தி வாஹினி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கவினின் குடும்பத்திற்கு பாதுகாப்பும், ரூ.1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடுவோம் என்றாா் அவா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிா்வாகிகள் வன்னியரசு, பாலசிங்கம், மாவட்ட நிா்வாகிகள் முத்துவளவன், ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்31ல்ஹப்ஹண்
பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.