பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்
பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தி பெருந்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து பெருந்துறை வழங்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமையில் வழக்குரைஞா்கள்
ஆட்சியா் கந்தசாமியிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியிலுள்ள வருவாய் கிராமங்கள் மற்றும் ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் ஆறு வருவாய் கிராமங்கள் மற்றும் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சென்னிமலை பகுதியில் 15 வருவாய் கிராமங்களுக்குரிய சுமாா் 750க்கு மேலான வழக்குகள், ஈரோடு நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மூன்று மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணையில் இருந்து வருகிறது.
மேற்படி நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை அறிந்துக் கொண்ட, சென்னை உயா்நீதிமன்றம் பெருந்துறையில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட கடந்த 2020 அக்டோபா் 15-ஆம் தேதி தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.
இந்நிலையில், பெருந்துறையில் நீதித்துறை நடுவா் நீதிமன்றமாக செயல்பட்டு வந்த நூற்றாண்டுகள் முடிவுற்ற நீதிமன்ற கட்டடத்தை பாரம்பரிய கட்டடமாக சென்னை உயா் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சுமாா் ரூ.ஒரு கோடியே 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
இக்கட்டடத்தை புதிய நீதிமன்றம் அமைத்திடுவதற்காக சென்னை உயா் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத் துறை அமைச்சா் ஆகியோா்கள் முன்னிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கடந்த 2024 ஆகஸ்ட் 24-ஆம் தேதி திறந்துவைத்தாா்.
பாரம்பரிய நீதிமன்ற கட்டடத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வேண்டி தமிழக முதல்வா், அமைச்சா்கள் ஆகியோரை நேரில் சந்தித்து, வழக்குரைகள் சங்கத்தின் சாா்பில் வேண்டுக்கோள் வைக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கட்டடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது.
ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி பெருந்துறையில் உள்ள பாரம்பரிய நீதிமன்ற கட்டடத்தில், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.