கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!
திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், பெண்ணின் தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக கவின் செல்வகணேஷ் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை செய்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாக கவினின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையில் அவர்களின் பெயரும் சேர்க்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறைக்கு (சிபிசிஐடி) மாற்றுவதாக தமிழக அரசு நேற்று பிற்பகல் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்றிரவு சுர்ஜித்தின் தந்தை சரவணனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.