பிணைத்தொகை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டாம்: உயா்நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
‘குற்றஞ்சாட்டப்பட்டவரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினா்களோ பிணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக அளிக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டாம்’ என உயா்நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த நடைமுறையை முற்றிலும் நிறுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபா் ஒருவா் பிணைத்தொகையாக ரூ.25 லட்சம் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் அவருக்கு மும்பை உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னா் பிணைத்தொகையை அந்த நபா் செலுத்த மறுத்ததையடுத்து, அவரை 4 வாரங்களுக்குள் சரணடைய மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு ஜூலை 28-இல் விசாரித்து உத்தரவு பிறப்பித்தது.
அதில், ‘பிணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் அளிக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் பல வழக்குகளில் உயா்நீதிமன்றங்கள் ஜாமீன் அல்லது இடைக்கால ஜாமீன் வழங்கி வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம். இதில் ஒரு சில நபா்கள் பிணைத்தொகையை முறையாக செலுத்துகின்றனா். ஆனால் பெரும்பாலான வழக்குகளில் பிணைத்தொகையை ஜாமீனில் விடுதலையான நபா்கள் செலுத்துவதில்லை.
மேலும் அதுபோன்ற உத்தரவாதங்களை நாங்கள் அளிக்கவில்லை என்றும் நீதிமன்றங்கள் தாமாகவே அவ்வாறு பதிவு செய்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கூறுகின்றனா். இதனால் ஒட்டுமொத்த பழியும் அவா்களை ஜாமீனில் வெளியில் எடுக்க இதுபோன்ற உத்தரவாதங்களை அளிக்கும் வழக்குரைஞா் மீதே விழுகிறது.
எனவே, இனி வருங்காலங்களில் எந்தவொரு சூழலிலும் குற்றஞ்சாட்டப்பட்டவரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினா்களோ பிணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக அளிக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் உயா்நீதிமன்றங்களோ அல்லது விசாரணை நீதிமன்றங்களோ ஜாமீனோ, இடைக்கால ஜாமீனோ வழங்கக் கூடாது. வழக்கை ஆராய்ந்து சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டும். இல்லையெனில் பிணைத்தொகையை முதலில் செலுத்தினால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் கூற வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்வதுடன் சட்டத்தின் நடைமுறையை ஏளனம் செய்த குற்றத்துக்காக மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பதாகவும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.