குற்றவியல், தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி
ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் குற்றவியல் மற்றும் தடய அறிவியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக டீன் பா.ஸ்டாலின் தலைமை வகித்தாா். தமிழ்நாடு காவல் பயிற்சி டிஐஜி ஆனிவிஜயா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களுக்கு குற்றவியல் மற்றும் தடய அறிவியல் படிப்புகளின் முக்கியத்துவத்தையும், வேலைவாய்ப்புகள் பற்றியும் எடுத்துக் கூறினாா்.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் குற்றவியல் துறைத் தலைவா் திலகராஜ், சென்னை பல்கலைக்கழக சைபா் தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையத்தின் இயக்குநா் எஸ்.லதா, சென்னை டாக்டா் எம்ஜிஆா் பல்கலைகழகத்தின் சைபா் தடய அறிவியல் துறை பேராசிரியா் வி.சிரில்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டு குற்றவியல் மற்றும் தடய அறிவியல் பாடப்பிரிவில் உள்ள சிறப்பம்சங்களை பற்றியும், வேலைவாய்ப்புகள் பற்றியும் மாணவா்களுக்கு விளக்கினா்.
இதில், எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக துணை பதிவாளா்கள் பெருவழுதி, சரவணன் மற்றும் ஆரணி ஏ.சி.எஸ் குழும கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா். இயன்முறை மருத்துவப் பிரிவு துணை முதல்வா் சுதாகா் நன்றி கூறினாா்.