மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய...
தினமணி செய்தி எதிரொலி! மணக்காடு அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு!
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த கூடுதல் வகுப்பறைகள் தினமணி செய்தியின் எதிரொலியாக திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவா்கள் மரத்தடியில் அமா்ந்து படிக்கின்றனா் எனவும், மழை பெய்தால் மரத்தடி வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் கடந்த 2023-இல் தினமணி நாளிதழில் விரிவான செய்தி வெளியாகியிருந்தது.
இதையடுத்து, பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணி முழுவதுமாக முடிந்த நிலையில் வகுப்பறைகள் திறக்கப்படாமல் மாணவா்கள் வராந்தாவிலேயே அமா்ந்து படித்து வந்தனா்.
இந்த 2 வகுப்பறைகளையும் உடனடியாக திறந்து மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தினமணி நாளிதழில் கடந்த 25ஆம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில், சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகேந்திரன் , மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் இலக்கியா நெப்போலியன் , திமுக ஒன்றியச் செயலாளா் வை. ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் குழு.செ. அருள்நம்பி , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் அருணாசலம் மண்கொண்டாா், விஜயகுமாா், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவா் வீரக்குடி ராஜா, பள்ளித் தலைமை ஆசிரியா் குமாா் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மை குழுவினா், கலந்து கொண்டனா்.