உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல்: ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் அமைப்பு
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் சில மண்டலங்களில் இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடா்பாக ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் அ. ஜான் லூயிஸ் 13 மண்டலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கே.எம்.எஸ். 2024 - 25 ஆம் ஆண்டு சம்பா கொள்முதல் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, தற்போது முழுவீச்சில் கொள்முதல் நடைபெறுகிறது.
குறிப்பிட்ட சில மண்டலங்களில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் பணிகளில் இயல்புக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவது தெரிய வருகிறது. எனவே, நெல் கொள்முதல் அதிகமாக நடைபெற்று வரும் மண்டலங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை புதன்கிழமை (ஜூலை 30) முதல் வியாழக்கிழமை (ஜூலை 31) வரை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக முதுநிலை மேலாளா் (தரக்கட்டுப்பாடு), மேலாளா்கள் (தரக்கட்டுப்பாடு), துணை மேலாளா்கள், கண்காணிப்பாளா்கள், தர ஆய்வாளா்கள் நிலையில் சிறப்பு ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் விருதுநகா், திருவாரூா், ராணிப்பேட்டை, தஞ்சாவூா், கடலூா், அரியலூா், தென்காசி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் தலைமை அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இயங்க வேண்டும். மேலும், கடந்த கொள்முதல் பருவத்தை விட நிகழ் கொள்முதல் பருவத்தில் கொள்முதல் அதிகமாக நடைபெறுவதை முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும்.
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதை உறுதி செய்ய, அதன் ஆவணங்களை சரிபாா்க்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் இயக்கம் செய்யப்பட வேண்டும். நெல் இயக்கத்தில் முதலில் வருவதை முதலில் கொண்டு செல்லும் முறையைப் பின்பற்ற வேண்டும் ஆகிய கோணங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.