ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!
ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் குளியலறையில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் தில்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதாக மாநில அமைச்சர் இர்பான் அன்சாரி தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சராக ராம்தாஸ் சோரன் உள்ளார். இவர் இன்று காலையில் குளிக்கும்போது குளியலறையில் தவறி விழுந்தார். அதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை ஜாம்ஷெட்பூரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் ராம்தாஸின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. குளியலறையில் விழுந்ததால் அவருக்கு மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்த உறைவு ஏற்பட்டதாக அமைச்சர் அன்சாரி தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்சாரி கூறுகையில்,
ஜாம்ஷெட்பூர் மருத்துவமனையில் ராம்தாஸ் சோரன் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ரத்த உறைவு இருப்பதைக் கண்டறிந்தனர்.
அவரை தில்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல தயாராகி வருகிறோம். நான் தொடர்ந்து தொடர்பிலிருந்து அவரது நிலையைக் கண்காணித்து வருகிறேன் என்று அவர் கூறினார்.