உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு
பிகார் வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறிவருகிறார்.
இந்நிலையில் பிகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "நேற்று(வெள்ளிக்கிழமை) பிகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது கணக்கெடுப்பு படிவத்தை நான் நிரப்பி கொடுத்தேன். பட்டியலில் பெயரே இல்லாதபோது நான் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்?
என்னுடைய வாக்காளர் அட்டை எண்ணைக் கொண்டு விவரங்களைத் தேடியபோது எதுவுமே கிடைக்கவில்லை. பூத் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் என்னுடைய படிவத்தை வாங்கிச் சென்றார்கள். எனினும் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை.
ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மொத்த எண்ணிக்கையில் சுமார் 8.5% பேர் அதாவது 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள், வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள், போலி வாக்காளர் அட்டை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் முகவரி, பூத் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் என எதுவும் இல்லை. இதனால் யார் பெயரை எல்லாம் நீக்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
ஆனால் தேஜஸ்வி யாதவின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறி அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.