ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 23 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்
23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஆகாஷ் தீப் 73 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 94 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின், ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 85 ரன்களுடனும், ஷுப்மன் கில் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?