சதுரகிரி மலையில் வேகமாய் பரவும் காட்டுத்தீ; பக்தர்கள் செல்ல தடை; தீயை அணைக்கப் போராடும் வனத்துறை
விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
4 பக்கமும் மலைகள் சூழ்ந்துள்ள இந்தக் கோயில் பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. சித்தர்கள் வாழும் பூமியாக அறியப்படும் இந்த மலையில் உள்ள சிவனை வழிபட இந்தக் கோயிலுக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் படி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரைதான் அனுமதி வழங்கப்படும். மேலும் மலையின் மேல் இரவில் யாரும் தங்க அனுமதி கிடையாது.

இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையானது வத்திராயிருப்பு வனச்சரகத்திற்குட்பட்ட சதுரகிரி மலைப்பகுதியில் பீட் 4 -ல் உள்ளது. அங்கே 2வது நாளாக காட்டுத் தீ வேகமாய் பரவி வருகிறது. 20க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படுவதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சதுரகிரி மலைப் பகுதியில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால் பக்தர்கள் இன்று கோவிலுக்குச் செல்ல வனத்துறை சார்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.